search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமெடி நடிகர் ஓலோடோமய்ர் ஜெலன்ஸ்கி"

    ஊழலுக்கு எதிரான கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கை பெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக இன்று பதவியேற்றார்.
    கீவ்:

    கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நாடு உக்ரைன். இந்நாட்டின் அதிபரான பெட்ரோ பொரஷென்கோவின் (வயது 53), பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. எனவே அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
     
    இதில் பெட்ரோ பொரஷென்கோ தனது அதிபர் பதவியை தக்கவைத்துக்கொள்ள மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அரசியலில் எந்தவித அனுபவமும் இல்லாத டி.வி. நகைச்சுவை நடிகரான ஓலோடோமய்ர் ஜெலன்ஸ்கி (41) களம் இறங்கினார்.

    அரசியலில் புதிய மாற்றத்தை விரும்பிய உக்ரைன் மக்கள் ஜெலன்ஸ்கியை ஆதரித்தனர். இதனால் களத்தில் இருந்த மற்ற 35 வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி பெட்ரோ பொரஷென்கோவிற்கு நேரடி போட்டியாளராக ஜெலன்ஸ்கி மாறினார்.

    தனது அரசியல் கொள்கை இதுதான் என்பதை தெளிவுப்படுத்தாத ஜெலன்ஸ்கி தேர்தல் நேர விவாதங்கள் மற்றும் நேர்காணல்களை தவிர்த்தார். இதனால் அவர் விமர்சனத்துக்குள்ளான போதும், மக்களின் மத்தியில் அவருக்கு ஆதரவு குறையவில்லை. இந்த சூழலில் கடந்த மாதம் 31-ந் தேதி அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நடந்தது.

    இதில், பெட்ரோ பொரஷென்கோவை விட ஜெலன்ஸ்கி 70 சதவீதம் அதிக வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றார். இரண்டாவது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஜெலன்ஸ்கி சுமார் 74 சதவீத வாக்குகளை கைப்பற்றி அமோக வெற்றிப்பெற்றார்.



    பொருளாதார பேராசிரியரான அலெக்சாண்டர் ஜெலன்ஸ்கிக்கு மகனாக பிறந்த ஜெலன்ஸ்கி, தனது 17 வயதில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்திய நகைச்சுவை போட்டியில் பங்கேற்றார்.

    அதனை தொடர்ந்து, டி.வி. தொடர்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். அவரது டி.வி. தொடர்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் பிரபல நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். கடந்த 2003-ம் ஆண்டு, தனது பள்ளி தோழியான ஒலனா கியாஷ்கோவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    ஜெலன்ஸ்கி கதாநாயகனாக நடித்த ‘மக்களுக்கான வேலைக்காரன்’ (சர்வண்ட் ஆப் பீப்புள்) என்கிற டி.வி. தொடர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கியது.

    கதையின்படி பள்ளிக்கூட ஆசிரியரான ஜெலன்ஸ்கி, நாட்டில் நடக்கும் ஊழலை விமர்சித்து பேசும் வீடியோ சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவி, அதன் மூலம் அவர் நாட்டின் அதிபர் ஆவார்.

    இந்த கதைக்களம்தான் ஜெலன்ஸ்கியை அரசியலுக்கு வரத் தூண்டியது. ‘மக்களுக்கான வேலைக்காரன்’ தொடர் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றதன் மூலம், உக்ரைன் மக்கள் தற்போதைய அரசின் மீது அதிருப்தியில் இருப்பதை அவர் தெரிந்துகொண்டார்.

    இதையடுத்து, தனது டி.வி. தொடரின் தலைப்பையே தனது கட்சியின் பெயராக கொண்டு ‘மக்களுக்கான வேலைக்காரன்’ என்ற கட்சியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கினார். மாற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலையை உணர்ந்து, அதிபர் தேர்தலில் களம் இறங்கினார்.

    அதன்படியே மாற்றத்துக்காக மட்டுமே அரசியலில் துளியும் அனுபவம் இல்லாத ஜெலன்ஸ்கியை அதிபராக மக்கள் தேர்வு செய்தனர்.

    வாக்குப்பதிவு முடிவுகளுக்கு பின்னர் மக்கள் மத்தியில் பேசிய ஜெலன்ஸ்கி, “நான் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டேன்” என்றார். மேலும் அவர் “நான் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதிபராகவில்லை. ஆனால், உக்ரைனின் குடிமகனாக அனைத்து நாடுகளிடமும் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். எங்களை பாருங்கள், இங்கு எல்லாமுமே சாத்தியமானது” எனவும் கூறினார். 

    இந்நிலையில், உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பைபிள் மற்றும் அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தின்மீது கைவைத்து ’உக்ரைன் நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை பேணிப் பாதுகாப்பேன்’ என அவர் உறுதிமொழி ஏற்றார்.

    பின்னர், தன்னை அதிபராக தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், ‘பொதுமக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
    ×